’இளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம்... ‘என் தகுதிக்கு மீறி என்னை புகழாதீர்கள்!’ - தனுஷ் பேச்சு!



பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொடரி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தனுஷ், பிரபுசாலமன், கீர்த்தி சுரேஷ், இயக்குநர்களான பார்த்திபன், கஸ்தூரி ராஜா, செல்வராகவன், ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, ஏ.எல். அழகப்பன், மனோபாலா, நடிகர்கள் தம்பி ராமையா, படவா கோபி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.
தனுஷ் ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடைபெற்ற விழாவின் தொடக்கமாக டிரெய்லரும் , “அடடா இதுஎன்ன பாடல்” வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. கரகோஷங்களுக்கு இடையே பலரும் பல சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்...
இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்...
விழாவின் மிக முக்கிய அம்சம் இந்த பட்டம்தான். விழா நடைபெறும் சத்யம் திரையரங்கம் பகுதி முழுக்க, ‘இளைய சூப்பர் ஸ்டார்’ தனுஷ் நடிக்கும் என்ற அடைமொழியுடன் விளம்பரங்கள் காட்சியளித்தது நமக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. அரங்கத்திலும் ரசிகர்கள் ஓயாமல் அதே வார்த்தையைச் சொல்லிக்கொண்டிருக்க, மேடையேறிய பிரபலங்கள் பலரும். தொடர்ந்து தனுஷை அதே அடைமொழியிலேயே அழைத்துப் பாராட்டினார்கள். மேலும் ’தனுஷின் 30வது படமான ’தொடரி’ யிலிருந்து, தனுஷை அப்படியே எல்லாரும் அழைப்போம்’ என தம்பி ராமையா, பாபு கணேஷ் உள்ளிட்டோரும் கூற, இன்னும் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இதற்கு தனுஷ் பதில் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, வழக்கம் போல் விழா முடிவு வரைக் காத்திருப்பு நீண்டது.
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமலுடன் ஒப்பீடு...
"சூப்பர் ஸ்டார் பெயரை சொன்னால் எல்லாரும் கொ’ வென கத்துவார்கள் என மனோபலா சொல்ல ரசிகர்கள் தொடர்ந்து சில நிமிடங்கள் ஆரவாரம் செய்தார்கள், இப்போது தனுஷ் பெயரைச் சொன்னவுடன் டபுள் மடங்காகக் கத்துவார்கள்" என்றவுடன் இன்னும் பலமாக ஆரவாரம் எழுப்பினார்கள். "அதெப்படி தம்பி ஒரு கேரக்டர் சொன்னால் அதுக்குள்ளயே சென்று வாழ்கிறீர்கள்" என மனோபாலா கேட்க, தனுஷ் அதற்கும் மெல்லிய புன்னகையை உதிர்த்த வண்ணம் அமர்ந்திருக்க உற்சாகமானார்கள் ரசிகர்கள். "என்னை ஒரு போர்ட்டராகவாவது இந்தப் படத்தில் சேர்த்திருக்கலாமே பிரபு, உன்னைய வெளியே வா கவனித்துக்கொள்கிறேன்" என பிரபு சாலமன் மீது செல்லக் கோபம் கொண்டார் மனோபாலா.
கோலிவுட் , பாலிவுட் இப்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்ட தனுஷின் நடிப்பு ரஜினி - கமல் என இருவரையும் கலந்த நடிப்பாக இருக்கிறது என பாரட்டிய தம்பி ராமையா, மீண்டும் பிரபு சாலமனின் படத்தில் இன்னும் ஓரு பயணம் என தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அதே போல் தனுஷின் நடிப்பை சிவாஜி, எம்.ஜி.ஆர் அளவுக்கு ஒப்பிட்டார் கலைப்புலி தாணு.

பார்த்திபன் பேசுகையில்..
"ஹாலிவுட் படம் எப்போது என சற்றுமுன் தனுஷிடம் கேட்டேன்,  ’ஜூன் மாதத்திலேயே நடிக்க வேண்டியது, ஆனால் வெற்றிமாறன் படம் இருப்பதால் ஜனவரி வரைக் காத்திருங்கள்’ என்றார். ஹாலிவுட் படத்தையே காத்திருப்பில் வைத்துவிட்டு, தமிழ் சினிமாவில் தன் புகழுக்கு உதவியவர்களுக்கு முதலில் படம் என்கிறார் தனுஷ். கீர்த்தி சுரேஷ் மாதிரியான பெண்களை பெற்றுக்கொள்ளும்போது கஞ்சத்தனம் பாராமல் ஒரு அரை டஜன் பெண்களையாவது பெற்றுக்கொள்ளுங்கள். மேனகா மகள்தான், ஆனால் மேனகா, ரம்பா என சேர்த்து செய்த அழகு கீர்த்திக்கு”, என அவர் பாணியிலேயே பேசி முடித்தார்.
விகடனுக்கு நன்றி...
செல்வராகவன் மைக்கை வாங்கும் போதே ரசிகர்கள் ‘புதுப்பேட்டை 2’ என சப்தமிட்டனர். “பிரபு சாலமன் எவ்வளவு சிரமப்பட்டு இந்த இடத்திற்கு வந்தார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு நான் மேடையில் வாழ்த்துச் சொல்ல நினைக்கிறேன். ’அவர் படம் என்றால் கேள்வியே இல்லாமல் டக்குனு ஓகே சொல்லிவிடு’ என தனுஷுக்கு சொன்னேன். தனுஷ் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ”தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” என்று செல்வராகவன் பேசிக்கொண்டிருக்கும்போது , மைக்கைப் பிடித்த பிரபுசாலமன் ”ஒரு சக இயக்குநரை வாழ்த்தவும் , தட்டிக்கொடுக்கவும் ஒரு நல்ல மனம் வேண்டும். அந்த மனம் செல்வராகவனிடம் விகடன் எடுத்த பேட்டியில் கண்டேன். அந்தப் பேட்டிக்காக விகடனுக்கு ஆத்மார்த்தமான நன்றி”  என நினைவு கூர்ந்தார் பிரபு சாலமன்.


நைஸ் , நல்லா நடிக்கறீங்க...
தங்க நிற உடையில் ஜொலித்த கீர்த்தி பேசுகையில், ”தனுஷ் சாருடன் நடிக்கும் போது மூன்று நாட்கள் ஷூட்டிங் போயிருக்கும், நான்காம் நாள் ஷூட்டிங்கின்போதுதான் தனுஷ் சார் என்னை அழைத்து,  ‘ நைஸ் , நல்லா நடிக்கறீங்கம்மா’ எனக் கூறினார் . எனக்கு இந்தப் படத்தின் கதையை சொல்லும் போதே, ’சார்... நிஜமா இந்தப் படத்தில் நான்தான் நடிக்கிறேனா?’ எனக் கேட்டேன், ’ஆமா நீங்கதான் நடிக்கறீங்க’ என பிரபு சார் சொல்லிய பிறகுதான் எனக்கு நிம்மதி வந்தது.  இயக்குநர் முதல் டீ கொடுக்கும் பையன் வரை அனைவருக்கும் நன்றி” எனக் கூறி அழகிய புன்னகையுடன் முடித்தார் கீர்த்தி சுரேஷ். 
எனக்கு சங்கடமாக இருக்கிறது...
தனுஷ் மேடையில் ஏற, ரசிகர்கள் உற்சாகமாகி ”இளைய சூப்பர் ஸ்டார்” என கோஷமிட, மைக்கை வாங்கிய தனுஷ், ”என்னை எல்லாரும் வாழ்த்தும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் தகுதிக்கு மீறி வாழ்த்தும்போது சங்கடமாகவும், கூச்சமாகவும் இருக்கிறது. இந்த மேடையில் சொல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனாலும் சொல்கிறேன். என்னை நினைத்துப் பெருமைப்படும் அளவுக்கு எவ்வளவு தூரம் உழைக்க முடியுமோ அவ்வளவு தூரம் உழைக்கிறேன். அதே மாதிரி உங்களை நினைத்து, நானும் பெருமைப்பட முதலில் நீங்கள் உங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் அம்மாவுக்கு நல்ல மகனாக , மனைவிக்கு நல்ல கணவனாக இருங்கள். குடும்பம்தான் நம்முடன் கடைசி வரை வரும். இடையில் பலரும் வருவார்கள் போவார்கள். குடும்பம் மட்டும்தான் நம்முடன் இருக்கும். நானும் இன்று என் குடும்பத்தோடுதான் வந்திருக்கிறேன். அப்பா, அம்மா, அக்கா எல்லாரும் இங்கே இருக்கிறார்கள். 


இந்தப் படத்தின் கதையை நான் கேட்கவில்லை. ’தேதி எப்போது எனச் சொல்லுங்கள்’  என்றுதான் கேட்டேன்” என பிரபுசாலமன் மீதுள்ள நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டவர், கீர்த்தி சுரேஷிற்குத் தன்னை விட கனமான பாத்திரம் எனவும், அவர்  அதனை மிக அழகாக செய்துள்ளதாகவும், அதை எல்லோரும் பாராட்டுவீர்கள் என்றும் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து படத்தின் இயக்குநர் முதல் அனைவருக்கும் நன்றி கூறி தனுஷ் முடிக்க, இசைத்தட்டு வெளியிடப்பட்டு மீண்டும் டிரெய்லர் ஒளிபரப்பானது.
 ” தளபதி படம் பார்த்துருக்கீங்களா சார்? அதுல உங்க மெகா ஸ்டார் மம்முட்டிக்கே எங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் பாதுகாப்பு" நாங்களும் பெரிய ஆள்தான் சார்” என டிரெய்லரில் வரும் இந்த வசனத்திற்கு மீண்டும் கரகோஷங்களை எழுப்பினர் ரசிகர்கள்.


EmoticonEmoticon

Ads Inside Post