' இந்தளவுக்கு வந்துட்டாங்களா...பார்த்துக்கலாம்!' -ஸ்டாலினை டென்ஷன்படுத்திய மா.செக்கள்




ட்டமன்றத் தேர்தலில் கட்சிக்குத் துரோகம் செய்த மாவட்டச் செயலாளர்கள் பலரை நீக்கி அதிர வைத்திருக்கிறது அறிவாலயம். ' ஆட்சியில் இல்லாததால் சில மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்கு எதிராகப் பேசுவதைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறார் ஸ்டாலின்' என்கின்றனர் தி.மு.கவினர்.

தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்ட நிர்வாகிகள் பற்றியும், கட்சி கொடுத்த நிதியில் முறைகேடு செய்தவர்கள் பற்றியும் தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. பூச்சி முருகன், சூர்யா வெற்றிகொண்டான், டாக்டர்.மஸ்தான், வழக்கறிஞர்கள் கண்ணதாசன், பரந்தாமன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், மாவட்டங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வேட்பாளர்கள், கிளை, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் என புகார் தெரிவித்த அனைவரையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். குழுவினர் ஆய்வு நடத்திய பிறகும், ஸ்டாலின் தரப்பினர் தனியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
விசாரணைக் கமிட்டி கொடுக்கும் அறிக்கையில் உள்நோக்கம் உள்ளதா என்பதையும் கண்காணித்து வருகிறார் ஸ்டாலின். நெல்லை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கோவை, ஈரோடு எனப் பரவலாக ஆய்வு நடத்தியுள்ளனர். இதில், ‘ ஈரோடு மாவட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், என்.கே.கே.பி ராஜாவோடு சேர்ந்து கொண்டு தேர்தல் வேலை பார்க்காமல் அலைக்கழித்தார். இவரோடு சேர்ந்து கொண்டு ஒன்றியச் செயலாளர்களும் வேலை பார்க்கவில்லை’ எனக் கட்சிக்காரர்கள் புகார் கூறி வந்தனர்.
இதுதொடர்பாக, நமக்கு பேட்டியளித்திருந்த என்.கே.கே.பி.ராஜா. ' நானும் வேலை பார்க்கவில்லை. என்னுடைய ஆட்களையும் வேலை பார்க்கவில்லை. என் மீது தலைமை தாரளமாக நடவடிக்கை எடுக்கட்டும்' என அதிரடியாக கூறியிருந்தார்.இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், "தற்போது தி.மு.க ஆட்சியில் இல்லாததால், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நினைப்பில் சிலர் பேசி வருகின்றனர். என்.கே.கே.பி ராஜா பேசிய தகவலை அறிந்த ஸ்டாலின், ' இந்தளவுக்கு வெளிப்படையாக பேசும் அளவுக்கு வந்துவிட்டார்கள். தேர்தல் நேரத்தில் இவர்கள் எப்படிச் செயல்பட்டிருப்பார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது' எனக் கோபப்பட்டார். நெல்லை, தூத்துக்குடி, நாகப்பட்டினத்தைப் போலவே, கோவை, ஈரோடு என மாவட்டத்திற்கு மாவட்டம் சளைக்காமல், தி.மு.க தோற்க வேண்டும் என வரிந்துகட்டிக் கொண்டு வேலை பார்த்துள்ளனர். ஆய்வுக் கமிட்டி கொடுத்த அறிக்கையின்பேரில், வருகிற 15-ம் தேதி முதல் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்குப் பயணப்பட இருக்கிறார் மு.க.ஸ்டாலின். பயணத்தின் இறுதியில் சில முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள். முகவரியே இல்லாமல் இருந்தவர்களுக்கு கட்சிதான் அங்கீகாரத்தைக் கொடுத்தது. அதை வைத்துக் கொண்டு தங்களை வளப்படுத்தியவர்கள் எல்லாம், தேர்தல் நேரத்தில் செய்த துரோகங்களை கட்சித் தலைமை அவ்வளவு எளிதில் மன்னித்துவிடாது” என்றார் அவர்.

'தேர்தல் வேலைகளுக்காக கட்சி ஒதுக்கிய நிதியைக் களவாடியவர்களிடம் இருந்து வசூலிக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்தாலும், குற்றச்சாட்டுக்கு ஆளான நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்கும் முடிவில் அறிவாலயம் இருக்கிறது’ என்கின்றனர் உடன்பிறப்புகள்.

-ஆ.விஜயானந்த்


EmoticonEmoticon

Ads Inside Post