'என்னை பின் தொடர்ந்த நபர்..!'- சுவாதியின் கடைசி எஸ்எம்எஸ்



ன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதாகத் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு சுவாதி கடைசியாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நண்பர் கொடுத்த தகவலின் படி ராம்குமாரை கைது செய்ததாகத் தனிப்படை போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி இன்ஜினீயர் சுவாதியை படுகொலை செய்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த பி.இ படித்த ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சுவாதிக்கும், ராம்குமாருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்விக்குப் பதில் இல்லாமல் இருந்தது. அதற்கு விடை அளித்துள்ளார் தனிப்படை போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

"சுவாதியின் வீடு சூளைமேடு, தெற்கு கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ளது. அவர் பணியாற்றிய இடம் செங்கல்பட்டு பரனூரில் உள்ள ஐ.டி நிறுவனம். தினமும் சூளைமேடு நெடுஞ்சாலையைக் கடந்து சௌராஷ்ரா நகர் 8வது தெரு வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சுவாதி செல்வது வழக்கம். அப்போது ஏ.எஸ் மேன்சனில் தங்கி இருந்த ராம்குமார் அவரைப் பார்த்துள்ளார். ராம்குமாருக்கு, சுவாதி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. சுவாதி வரும் காலை நேரத்துக்கு தவறாமல் ஆஜராகி உள்ளார் ராம்குமார். பிறகு, சுவாதியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

பெருமாள் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் உள்ள சுவாதிக்காகவே ராம்குமாரும் அங்கு சென்றுள்ளார். சுவாதி வேலை பார்க்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்குச் சென்றுள்ளார். டிக்கெட் எடுக்க சென்ற சுவாதியின் அருகிலேயே அவரும் நின்றிருக்கிறார். கறுப்பாக, ஒல்லியாக கிராமத்து சாயலில் உள்ள,கட்டட வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் தன்னையே பார்ப்பதை சுவாதி தன்னுடைய நெருங்கிய தோழியிடம் சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் அதை பெரியளவில் கண்டு  கொள்ளவில்லை. இதைத் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ்.ஆக அனுப்பியுள்ளார். அந்த எஸ்.எம்.எஸ் இப்போது எங்கள் வசம் உள்ளது.

இதன்பிறகு சுவாதியைப் பின்தொடர்ந்து சென்ற ராம்குமார், அவர் வேலைபார்க்கும் இடம் வரை சென்று விட்டு ரயிலில் திரும்பி வந்துள்ளார். கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி, டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த போது அவரது பின்னால் ராம்குமார் நெருங்கி நின்றுள்ளார். தர்மசங்கடத்தில் தவித்த சுவாதி, இதன்பிறகு மே 10ம் தேதி அவரது நெருங்கிய நண்பருக்கு ராம்குமாரின் டார்ச்சர் குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். சுவாதிக்காக அந்த நண்பரும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்து ராம்குமாரைப் பார்த்துள்ளார். சுவாதியுடன் அவரைப் பார்த்ததும் ராம்குமார் அமைதியாகவே இருந்துள்ளார். அதன்பிறகு சில நாட்கள் அவர் சுவாதியை பின்தொடரவில்லை.

சுவாதி, இந்தத் தகவலை இலைமறை காயாக வீட்டில் சொல்லிய பிறகு அவரை பைக்கில் அழைத்து வந்துள்ளார் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன். ஆனாலும், சுவாதியை பின்தொடர்வதை ராம்குமார் நிறுத்தவில்லை. சுவாதியிடம் தன்னுடைய காதலை ராம்குமார் சொன்ன போது, அவரை 'தேவாங்கு போல இருக்கும் உனக்கு......' (அதற்கு மேல் உள்ள வார்த்தையை இங்கு குறிப்பிட முடியாது) என்று ஆத்திரத்தில் சுவாதி திட்டியுள்ளார். இது ராம்குமாருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவே ராம்குமார், சுவாதியை கொலை செய்ததற்கு முக்கிய காரணம்" என்றார்.

போலீஸார் இப்படி சொன்னாலும் ராம்குமாருக்கும், சுவாதிக்கும் ஃபேஸ்புக் பழக்கமும் இருந்துள்ளது என்ற தகவலும் உள்ளது. சுவாதி கொலை வழக்கில் போலீஸாரின் முதல் சந்தேக பார்வை, அவரது நெருங்கிய நண்பர் முகமது பிலால் சித்திக் மீதே விழுந்தது. அவரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விசாரித்தனர். அவருக்கு சுவாதி அனுப்பிய எஸ்.எம்.எஸ். ஒவ்வொன்றையும் பார்த்து அதற்கேற்ப விசாரணை நடத்தப்பட்டது. ராம்குமாரை கண்டுபிடிக்க பிலால் சொன்ன தகவல் போலீஸாருக்கு உதவியாக இருந்தது. இதனால் இந்த வழக்கில் பிலால் முக்கிய சாட்சியாக சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து ராம்குமார் தங்கி இருந்த மேன்சனில் உள்ள இருவரும் இந்த வழக்கில் சாட்சிகளாகிறார்கள். இவ்வாறு போலீஸார் தங்கள் வசம் உள்ள ஆதாராங்கள் அடிப்படையில் ராம்குமார் மீதுள்ள குற்றத்தை நிரூபிக்க உள்ளனர். அதை உடைத் தெறியும் வகையில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் குழுவும் செயல்பட்டு வருகிறது.

ராம்குமார் தங்கி இருந்த மேன்சனின் காவலாளி கோபால். இவருக்கு காது சரிவர கேட்காது. இதனால் போலீஸார் கேட்கும் கேள்விக்கு வேறு பதிலைச் சொல்லி அவர்களை சிரமப்படுத்தினார். போலீஸாரின் கண்காணிப்பில் இருந்த கோபால், கடந்த இரண்டு நாளைக்கு முன்பு சம்பளத்தை வாங்கி கொண்டு யாரிடமும் சொல்லாமல் எஸ்கேப் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து மேன்சனுக்கு தினமும் ஒரு பெண், அங்குள்ளவர்களுக்கு குறைந்த விலையில் உணவுகள் கொடுப்பது வழக்கம். அந்த பெண்ணிடமும் போலீஸார் ராம்குமார் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, அவர், ராம்குமார் பணம் கொடுக்காததால் அவருக்கு உணவு கொடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். கொலை நடந்த அன்று ராம்குமார்,மேன்ஷனில் தனது உறவினர் ஒருவரைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த நபரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


EmoticonEmoticon

Ads Inside Post