கதர் துணியில் கல்யாண பத்திரிகை... கருப்பட்டி காபி... சென்னையில் ஒரு பசுமைத் திருமணம்!


ல்யாணம்னா மாப்பிள்ளையோ, பொண்ணோ மட்டும் முக்கியமில்லை...நம்ம ஊரைப் பொறுத்த வரையில் கல்யாணம்னாலே கிராண்டா, பட்டுப்புடவை, தங்க நகை, பளபளப்பான மண்டபம், கோட், சூட், கறி விருந்து, பிரியாணி இதெல்லாம்தான் ரொம்ப முக்கியம் என்பது முக்கால்வாசி இளசுகளுக்கும் சரி, பெருசுகளுக்கும் சரி மனதில் பதிந்து போன பிம்பம். 'நீ தாலி கட்டு கட்டாமப் போ...மோதிரம் மாத்து மாத்தாம போ...எங்களுக்கு விருந்து சாப்பாடும், விண்ணைத்தாண்டி வருவாயா மியூசிக்கும் போட்டே ஆகணும்' என்பது நண்பர்கள், உறவினர்களோட டிமாண்ட்.
இவற்றையெல்லாம் உடைச்சு ஒரு கல்யாணம் இங்க சாத்தியப்படுமா? நிச்சயம் சாத்தியம்தான் என்று நிரூபித்திருக்கின்றார்கள் சென்னையைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகளான மோனிகா பாண்டியன் - பிரவீன் ராஜ். முழுக்க, முழுக்க ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த திருமணமாக தங்களது மணநாள் வைபவத்தை மாற்றிக் காட்டியிருக்கின்றார்கள் இவர்கள். அதுவும் இது வெஜிடேரியன் கல்யாணம் அல்ல... வேகன் கல்யாணம்.
அதென்ன வேகன்? 'சைவத்திலும் சுத்த சைவம்தான் வேகன்' என்கிறார்கள் மோனிகா, பிரவீன் இருவரும். சைவ உணவு உண்பவர்கள் கூட பால், தயிர், நெய் போன்ற விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களையும், பட்டு, தோல்பை போன்ற விலங்குகளின் தோல், பட்டுப்பூச்சியில் இருந்து கிடைக்கும் பொருட்களையும் உபயோகிப்பார்கள். ஆனால், வேகன் பட்சிணிகளோ முழுவதுமே இயற்கை விரும்பிகள். விலங்குகளிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கூட உபயோகப்படுத்தாதவர்களாம். அதனால் இவர்கள் திருமணத்தில் காபிக்கு கூட தடா!
 ’இயற்கையோடு இணைந்த’ கல்யாணம் என்று அடைமொழி சூட்டப்படும் இந்தக் கல்யாணத்திற்கான பிளானை, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே துவங்கியிருக்கிறார்கள் இருவரும். வேகன் உணவுப் பழக்கத்தால் இருவருமே நீண்ட கால நண்பர்கள் என்றாலும், 'இது அம்மா-அப்பா பார்த்து வச்ச கல்யாணம் பாஸ்' என்று கண் சிமிட்டுகிறார் மோனிகா.
அடிப்படையில் தேனியைப் பூர்வீகமாகக் கொண்ட மோனிகாவும், சென்னையைச் சேர்ந்த பிரவீனும் இலை, தழை விரும்பிகள். விலங்குகளைத் துன்புறுத்திக் கிடைக்கும் எதையும் உபயோகிக்கக் கூடாது என்கின்ற எண்ணம் கொண்டவர்கள்.  சுற்றுச்சூழலுடன் இணைந்த உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தனியாருன் இணைந்து நடத்தி வருகிறவர் மோனிகா. பிரவீனோ ஒரு டிபிக்கல் சாப்ட்வேர் ஊழியர். ஆனால், இருவருமே இணைந்தது ‘வேகன்’ என்னும் புள்ளியில்தான். இந்த நிலையில் இரண்டு வீட்டாரும் மோனிகா- பிரவீனை வாழ்க்கையிலும் இணைத்து விடலாம் என்று முடிவெடுத்திருக்கின்றார்கள்.
ஆனால், இருவருக்குமே லட்சம், லட்சமாய் பணத்தை வாரி இறைத்து மண்டபம், பூக்கள், பட்டு உடைகள், அசைவ உணவு என்று கழுத்தை நெறிக்கும் செலவினைக் கொண்ட நம் கல்யாண முறையில் இஷ்டமில்லை. இருவருமே இயற்கைக் காதலர்கள் என்பதால், 'நாம் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில்தான் திருமண விழாவினை நடத்தப் போகின்றோம்' என்று முடிவெடுத்து விட்டார்கள்.
பழமையிலேயே ஊறிப்போன சமுதாயத்தில், பெற்றோரிடம் உடனடியாக அனுமதி கிடைத்துவிடுமா என்ன? அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டனர், இருவரின் பெற்றோரும். ஆனாலும், மோனிகாவும், பிரவீனும் தங்களுடைய முடிவில் உறுதியாக நின்றுள்ளனர். ஒருவழியாக பிள்ளைகளைப் புரிந்து கொண்ட பெற்றோரும், அவர்களுடைய ஆசைக்கு செவிசாய்த்துவிட்டனர்.
உடனடியாக அதற்கான ஐடியாக்களையும், எப்படியெல்லாம் இயற்கை வழிமுறைகளைக் கொண்டு திருமணத்தை நடத்தலாம் என்கின்ற சார்ட்டையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டது மோனிகா - பிரவீன் ஜோடி. கிட்டத்தட்ட ஒரு வருட கால திட்டமிடலுக்குப் பின்பு, கடந்த நான்கு மாதங்களில்தான் பூக்கள், இடம், அலங்காரம் என்று தேடித் தேடி அமைத்திருக்கின்றனர்.
திருமணம் நடத்துவதற்கு முதலில் இயற்கையான மரங்கள், செடிகள் சூழ்ந்த இடம் வேண்டும் என்று நினைத்தபோது சென்னையில் முதலில் அப்படி ஒரு இடம் கிடைக்கவில்லை. பலநாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சென்னைக்குள்ளேயே ஒரு தனியார் சுற்றுலாத்தளத்தில் திருமணத்திற்கான இடவசதி கிடைத்துள்ளது. சரி, கல்யாண வைபோகத்தின் முதல்படி இயற்கையோடு இணைந்ததாய் கிடைத்துவிட்டது.
அடுத்ததாக பத்திரிகைகள்... சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான கெமிக்கல் பேப்பர் உபயோகத்தினைத் தவிர்க்க, மெல்லிய கதர் துணிகளிலும், கையால் உருவாக்கப்பட்ட தாள்களிலும் பத்திரிகைகளை உருவாக்கி  உறவினர்கள், நண்பர்களுக்கு  அளித்திருக்கின்றார்கள். நெருங்கிய தோழமைகளுக்கு ஆன்லைன் மூலமாக ‘இ-இன்வைட்’ அனுப்பி விட்டனராம். உறவினர்களையும் முடிந்த வரையில் சில்க், ஃபர் போன்றவற்றை தவிர்க்க கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
" முதல்ல எல்லா சொந்தக்காரர்களும் எதிர்ப்புதான் தெரிவிச்சாங்க. ஆனாலும், ஒரு புதுமையான விஷயம் நடக்கறப்போ அதற்கான எதிர்ப்புகள் சகஜம். அதையும் தாண்டி நாங்க ஜெயிக்கணும்னு நினைச்சு அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை" என்கிறார் பிரவீன்.
திருமண நாளன்று, முழுவதும் பருத்தி இழைகளால் தயாரிக்கப்பட்ட கோஆப்டெக்ஸ் புடவையில் தைக்கப்பட்ட டிசைனர் கவுனை மோனிகாவும்,  இயற்கையான முறையில் விளைந்த பருத்தியால் தைக்கப்பட்ட உடைகளை பிரவீனும் அணிந்துள்ளனர். மோனிகாவின் நகைகள் முழுவதும் நெல், விதைகள், மணியால் ஆன நெக்லஸ், கொலுசு, தோடு ஆகியவைதான். காலிலும் கூட கைகளால் தயாரான மறுசுழற்சி செய்யப்பட்ட காட்டன் இழைகளால் ஆன செருப்பு என்று அணிந்து வலம் வந்திருக்கின்றனர் இருவருமே.  தாலி மட்டுமே தங்கம் என்றாலும், அதிலும் ஒரு மரவடிவத்தை உருவாக்கி அணிவித்திருக்கிறார் பிரவீன், மோனிகாவிற்கு.
 
கல்யாண மாலை ஏலக்காய், பாதாம், காட்டன் நூல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டிருந்ததால், இன்று வரை வீட்டில் அவற்றை உபயோகித்து வருவதாய் பூரிக்கிறார் மோனிகா.
திருமணம் நடைபெற்ற இடம் முழுவதையுமே சாமந்திப் பூக்களால் தோரணங்களாலும், வளைவுகளாலும் அலங்கரித்துள்ளனர். அவற்றையும் கூட மீண்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும் என்கின்ற முடிவுக்கு பின்னரே உபயோகப்படுத்தியுள்ளனர்.
நாதஸ்வர ஒலி இல்லாவிட்டால் கல்யாணமே முழுமையுறாது என்ற நிலையில், பொதுவாக திருமணங்களில் உபயோகிக்கப்படும் தோலால் ஆன மேளம் வேண்டாம் என்று, சிந்தெடிக் பைபர் கிளாஸினால் ஆன மிருதங்கமே இசையெழுப்பி மங்கல நாதம் முழங்கியுள்ளது.
வயிற்றுக்கு இதமளிக்கும் உணவும் முழுமையாக சுத்த சைவம்தான். பால், தயிர், மோர், நெய்க்கெல்லாம் தடா. வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்பட்ட பால், தயிர், சோயா பால், நெய்யில்லாத பொங்கல், சோயா மோர், சொட்டு நெய் கூட உபயோகிக்கப்படாத இனிப்புகள், இளநீர், பழக்கலவை என்று எல்லாமே இயற்கை உணவுகள்தான். கூடவே கருப்பட்டி காபி, பிளாக் டீ, கீரின் டீ போன்றவையும் விருந்தினர்களின் வயிற்றைக் குளிர வைத்திருக்கின்றன. கூடவே ஒரு டிவியில் சுற்றுச்சூழல் சார்ந்த வீடியோக்களையும் ஒளிபரப்பியுள்ளனர்.
தாம்பூலப்பையில் கூட,  கையால் தயாராகும் மஞ்சள் பைகளில் இயற்கையை நேசிக்கும் வகையிலான வாசகங்களைப் பதிவிட்டு, சாக்லெட்டுக்கு மாற்றாக கடலைமிட்டாய், வெற்றிலை பாக்குடன் கூடவே, 'ஏன் இயற்கை உணவுகள் அவசியம்' என்கின்ற சின்ன புத்தகத்தையும் அளித்திருக்கின்றனர் இந்த எகோ பிரண்ட்லி தம்பதியினர்.
’மின்சார உபயோகமற்ற இயற்கை முறை கல்யாணம்தான் தேவை என்றே திருமணம் நடக்கவிருந்த இடத்தை தேர்வு செய்தோம். கல்யாணத்திற்கு கிட்டதட்ட 750 உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர். எல்லாருக்குமே இயற்கை உணவுகள்தான். இடம் கண்டுபிடிக்கறது மட்டும்தான் கஷ்டமாயிருந்தது. மற்றபடி இந்த முறையில் திருமணம் செய்ய, ஒரு நார்மல் கல்யாணத்தை விடக் குறைவாதான் செலவாச்சு. 6 லட்சத்துக்குள் எல்லா செலவுகளையும் முடிச்சுட்டோம். ஆனால், இன்னைக்கு சுற்றுச்சூழலே சீர்கெட்டு வர நிலையில், ஏதோ ஒரு மாற்றத்தை எங்களோட திருமணம் மூலமா விதைச்சிருக்கோம் அப்டிங்கறதே எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குது.
மரக்கன்று கொடுக்கறது மட்டும் இயற்கையை நேசிக்கறது இல்லை. அதுக்கும் மேல கல்யாணத்தையே இயற்கையோட இணைந்து நடத்தலாம்னு நாங்க முதல்படி எடுத்து வச்சுருக்கோம். இது கண்டிப்பா இன்னும், இன்னும் இளைஞர்கள்கிட்ட மாற்றத்தை ஏற்படுத்தி, மறுபடி  பசுமை நகரமா சென்னை மாறும்னு நாங்க நம்புறோம்.” என நம்பிக்கையுடன் சொல்கின்றனர் இந்த சுற்றுச்சூழல் காதல் தம்பதியர்!  
இயற்கை போற்றுதும்!


EmoticonEmoticon

Ads Inside Post