பெண் வேடமிட்டு கொண்டையை மறைக்க மறந்து மாட்டியவர்!



ஜெயம்கொண்டத்தை சேர்ந்தவர் சேகர் ( வயது 27). இவரது மனைவி இந்திரா. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த சேகர், அதனை விட்டு விட்டு தமிழகம் திரும்பினார். அவரது மனைவி இந்திரா, தாய் வீட்டில்தான் இருந்துள்ளார். வேலை இல்லாத நிலையில் மனைவியை சந்திக்க வந்த சேகரை, அவரது மாமியார் சந்திக்க விடவில்லை.  'வேலை இல்லாத உனக்கு மனைவி, குடும்பம் தேவையா' எனக் கூறி,  சேகரை  திட்டியதாகத் தெரிகிறது. இதனால் சேகர்,  இந்திராவை சந்திக்க முடியாத வருத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில் சேகருக்கு வித்தியாசமான ஐடியா உதித்தது. பெண் வேடத்தில் மனைவியின் தோழி போல மாமியார் வீட்டுக்கு சென்றால் அவரை சந்தித்து விடலாம் என யோசித்தார். அதன்படி கடந்த சனிக்கிழமை 'அவ்வை சண்முகி'  போல  'சுடிதார்' அணிந்து, பெண் வேடமிட்டு, மனைவியை பார்க்க திண்டிவனம் சென்றார். ஆனால் வடிவேலு கொண்டையை மறைக்க மறந்த கதையாக , சுடிதார் வேடம் போட்டவர்,  காலில் ஆண்கள் அணியும் செருப்பை அணிந்து சென்றுள்ளார்.

திண்டிவனத்தில் தியாகி சண்முகம் பிள்ளை தெருவில், சுடிதார் போட்டவாறு காலில் ஆண்கள் செருப்பு அணிந்து ஒருவர் செல்வதை பார்த்து மக்கள் சந்தேகமடைந்தனர். சேகரின் போதாத நேரத்திற்கு ஒருநாள் முன்னதாகதான் அந்தப் பகுதியில் குழந்தை ஒன்றும் கடத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சேகரை பின்தொடர்ந்த மக்கள் அவரை 'குழந்தை கடத்தல்காரர்' என பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

சேகர் உண்மையை சொல்ல, அவரது மனைவி இந்திரா அழைத்து வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். காவல் துறையினர், சேகரின் அப்பாவித்தனமான கதையைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டனர். பின்னர் இருவருக்கும் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.


EmoticonEmoticon

Ads Inside Post