தாம்பரம்,
செல்போனில் பேசிய
மர்மநபர்கள், கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.30
ஆயிரம் மோசடி செய்தனர். இதனால் மனம் உடைந்த பெண், வீட்டில் இருந்த
திராவகத்தை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போனில் அழைப்பு
தாம்பரம் கன்னடர்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 40).
இவர், சென்னையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது
செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர்கள், ‘‘ரூ.50 ஆயிரம்
கடன் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்’’ என்றனர்.
அதனை நம்பிய
முத்துலட்சுமி, மர்மநபர்கள் கேட்டபடி தனது வங்கி கணக்கு எண்ணை கொடுத்தார்.
மேலும் அவரிடம் நைசாக பேசிய மர்ம நபர்கள், அவரது ஏ.டி.எம். கார்டு எண்
மற்றும் கடவு சொல் (பாஸ்வேர்டு) எண்ணையும் பெற்றனர்.
ரூ.30 ஆயிரம் மோசடி
சில நாட்களுக்கு பின்னர் முத்துலட்சுமியின் வங்கி கணக்கில் இருந்து
ரூ.30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், வங்கி அதிகாரியிடம் கேட்டார்.
அதற்கு அவர்,
ஆன்லைன் மூலம் இந்த பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதன்
பிறகு அவருக்கு கடன் தருவதாக கூறிய மர்ம நபர்கள் முத்துலட்சுமியை தொடர்பு
கொள்ளவில்லை. அவர்களது செல்போனும் ‘‘சுவிட்ச் ஆப்’’ செய்யப்பட்டு இருந்தது.
அதன்பிறகுதான்
கடன் தருவதாக கூறி செல்போனில் பேசிய மர்மநபர்கள் வங்கியில் இருந்து ரூ.30
ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்து விட்டது அவருக்கு தெரிந்தது. இதுபற்றி
முத்துலட்சுமி யாரிடமும் தெரிவிக்காமல் மன வேதனையில் இருந்தார்.
திராவகம் குடித்தார்
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி, கழிவறையில்
இருந்த திராவகத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை அக்கம்
பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடம் போலீசார்
நடத்திய விசாரணையில் மர்மநபர்களிடம் அவர் பணத்தை இழந்த தகவல் தெரிய
வந்தது. இது குறித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு
செய்து மர்மநபர்கள் பேசிய செல்போன் எண் மற்றும் எங்கிருந்து பணம்
எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
EmoticonEmoticon