1000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன! தொடங்கியது ஆய்வுப் பணிகள்


சென்னை: தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடைகளில் 1000 கடைகள் மூடப்படும் என்றும், அதற்கான வட்டாட்சியர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் தொடங்கியுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், அவர் பேசிய பிரச்சாரக் கூட்டங்களிலும்,  'அதிமுக தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானார். பதவியேற்பு முடிந்து, அவர் கோட்டைக்குச் சென்று படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டு, அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். மேலும், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தில் இரண்டு மணி நேரத்தைக் குறைத்தும், முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடியும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஒரு மாதகாலம்  தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களையும் ஏற்று 500 கடைகளை மூடியது டாஸ்மாக் நிர்வாகம். இந்நிலையில், மேலும் 1000 கடைகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மூடிட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான தாசில்தார்கள்  தலைமையிலான ஆய்வுக் கூட்டங்கள், தற்போது தொடங்கி அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகின்றன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்,பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள இடங்கள்,வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள்,குடியிருப்புப் பகுதிகள் ஆகிய இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக அகற்றப்படும் என்று தெரிகிறது.                     


EmoticonEmoticon

Ads Inside Post