லவ் டுடே முதல் கஜினி வரை.. - அஜித் தவறவிட்ட வெற்றிப்படங்கள்!



யக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவி டைரக்டராக வேலை பார்த்த விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள '24" திரைப்படம் வெளிவந்துள்ளது. முதலில் இந்த படத்தில் விக்ரம் நடித்தார். அவருக்கு ஜோடியாக இலியானா நடித்தார். விக்ரம் குமார் இயக்கினார். ஒரு வாரம் படப்பிடிப்புகூட நடந்தது. திடீரென படத்துக்கு குட்பை சொல்லிவிட்டு 'தெய்வத் திருமகள்" ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் விக்ரம்.  என்ன செய்வதென தெரியாமல் திகைத்த விக்ரம் குமார்  தமிழ் சினிமாவுக்கு தலைக்குமேல் கும்பிடு போட்டுவிட்டு ஆந்திர மண்ணில் அடைக்கலமானார்.  நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா என்று மூன்று தலைமுறை நடிகர்களை இயக்கி 'மனம்" என்றொரு தெலுங்கு படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.  இப்போது, விக்ரமை வைத்து இயக்கிய 24-ஐ சூர்யாவிடம் சொல்லி இயக்கி, அவர்மூலம்  மீண்டும் தமிழ் மண்ணுக்கு வந்து இருக்கிறார்.   
இதுபோல தமிழ் நாட்டில் ஹிட் அடித்த படங்களின்  பட்டியலை தூசுதட்டி பார்த்தால் விழிகள் வியப்பால் விரியும்.  முதலில் அஜித்.  இவர்  'வேண்டாம் சாமீ" என்று நடிக்காமல் தவிர்த்த படங்கள் எல்லாமே சர்ப்ரைஸ் சக்ஸஸ். பாலசேகரன் இயக்கத்தில் வெளிவந்து விஜய் நடித்த  'லவ்டுடே" படக்கதையை முதலில் கேட்ட அஜித் 'நோ" சொன்னார்.  'ரன்" கதையை  அஜித்திடம் சொன்னார் லிங்குசாமி. அஜித் மறுக்க, மாதவன் நடிக்க படம் பம்பர் ஹிட்.   பாலாவின் 'நந்தா" படத்துக்கான அஜித்தின் போஸ்டர், ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டிவிட்டனர். திடீரென  அஜித் விலகிக்கொள்ள சூர்யாவுக்கு அடித்தது லக்.  ஏவி.எம். தயாரிப்பில் சரண் இயக்கத்தில் பூஜை போட்டு 'ஏறுமுகம்" என்று பெயர்சூட்டி நான்கு நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. திடீரென நின்றுபோன அந்தப்படம்தான் பின்னாளில் விக்ரம் நடிப்பில்  'ஜெமினி"யாக வெளிவந்து ஊரெல்லாம்  'ஓ" போட்டது. 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அஜித் நடிக்க  பூஜை போடப்பட்ட 'மிரட்டல்" நின்று போனது. அந்தக்கதையே   பெயர் மாறி 'கஜினி"யாக சூர்யா நடிப்பில் வெளிவந்தது. கெளதம் மேனன் இயக்கத்தில் 'போலீஸ் ஸ்டோரி" என்று பெயரிடப்பட்டது. என்ன தடங்கல் ஏற்பட்டதோ அந்தப்படத்தில் இருந்து அஜித் எஸ்கேப். அதே கதை சூர்யா நடிப்பில் 'காக்க காக்க" திரைப்படமாக வெளிவந்தது. இயக்குநர் ஷங்கர் நடிப்பில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்து மெகா ஹிட்டான ஜீன்ஸ் படமும், அஜித்திற்கு சொல்லப்பட்ட கதைதான். தரணி இயக்கத்தில் வெளிவந்த 'கில்லி", 'தூள்' இரண்டு படக்கதையும் முதலில் அஜித்துக்குன் சொல்லப்பட்டது. அவரால் தவிர்க்கப்பட்டு,  அதன்பின் விஜய் நடிப்பில் 'கில்லி"யும், விக்ரம் நடிப்பில் 'தூள்" படமும்  சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
 
 'அஜித் சார் வேண்டாம்னு விட்டுக் கொடுத்த 'நந்தா", 'காக்க காக்க", 'கஜினி" படங்கள்தான்  என் சினிமா உலக கேரியரையே புரட்டிப் போட்டது" என்று சூர்யா மனம் திறந்து ஒப்புக்கொண்டது தனிக்கதை.  கமலுக்கு சொல்லப்பட்டு, ப்ரீத்தி ஜிந்தாவுடன் ஃபோட்டோ ஷூட் எல்லாம் எடுக்கப்பட்ட  'எந்திரன்"  படத்தில் பின்னாளில் ரஜினி நடித்தார். டைரக்டர் ஹரி விஜய்யை தேடிப்போய் கதை சொன்னபோது 'போலீஸ் கதை வேணாம் வேற ஏதாவது யோசிங்க" என்று விஜய்யால் நிராகரிக்கப்பட்ட 'சிங்கம்" படம்தான் இப்போது, இரண்டு பாகங்களும் ஹிட்டடித்து,  மூன்றாம் பாகத்தில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. 
 
 - எம். குணா  


EmoticonEmoticon

Ads Inside Post