’’வாழ்க்கைல பயப்படக் கூடாது!’’ - அண்ணியார் காயத்ரியின் தில் டிப்ஸ்



சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'தெய்வமகள்' சீரியலில் 'காயத்ரி' கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து அசத்தி வருபவர் ரேகா குமார்... கிட்டத்தட்ட 17 வருடங்களாக வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கிக் கொண்டிருப்பவரிடம் ஒரு கலக்கலான பேட்டி.

எப்படி, எப்பொழுது நடிக்க வந்தீர்கள்?

'பெங்களூரில் உள்ள பிரபல கல்லூரியில் பி.ஏ.மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் படித்துக் கொண்டிருந்தேன். முதல் வருடம் படிக்கும்பொழுதே என் வகுப்பு தோழி ஊக்குவிக்க, அவருடைய அம்மா  என்னை சீரியலில் வாய்ப்பிற்காக இயக்குநர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் என்னைப் பார்த்ததும், ''இவ்வளவு குள்ளமா இருக்கியேம்மா...?’ என அனுப்பி வைத்துவிட்டார். ஏமாற்றத்தோடு திரும்பி வந்துவிட்டேன். அடுத்து படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் படிப்பை முடித்த பிறகு, அதே இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்தது. மலையாளத்தில்  'சேச்சி அம்மா' எனும் முதல் சீரியலிலேயே எனக்கு நெகட்டிவ் ரோல்தான் கொடுக்கப்பட்டது. இப்பொழுதும் அந்த சீரியலில் வந்த 'மாயா மிர்கா' ரோல்தான் பலருக்கும் பரிட்சயம். 'சேச்சி அம்மா' சீரியலில் அந்த ரோல் பெரிய அளவுக்கு பிரபலமானது. அதற்குப் பிறகு பல வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. இப்போது வரை.

தமிழ், மலையாளம் தவிர வேறு என்னென்ன மொழிகளில் நடித்திருக்கிறீர்கள்?

' கன்னடம், தெலுங்கு சீரியல்களிலும் நடித்திருக்கிறேன். கன்னட சீரியல் 'avayaktha'  மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. கதாநாயகி கதாபாத்திரம்  தவிர, அண்ணி, அக்கா, அம்மா என பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.''.

உங்கள் வீட்டில் சினிமா, டிவி துறையைச் சார்ந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? 

''இல்லை, நான் தான் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தேன். சீரியலுக்கான முதல் வாய்ப்பு கிடைத்த போது, என் பெற்றோர்களிடம் பயந்துகொண்டே சொன்னேன். அவர்கள் மறுப்பு எதும் கூறாமல் என்னை ஏற்றுக் கொண்டது எனக்கு மிகப்பெரும் சந்தோஷம். திருமணத்திற்குப் பிறகு நான் நடிக்கமாட்டேன்' என எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தேன். திருமணத்திற்குப் பிறகு இந்த விஷயத்தை என் மாமியாரிடம் சொன்னதும், 'உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்.. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை  ' என்று கூறிவிட்டார் . அதற்குப் பிறகு, இதோ இப்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறேன் அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன்.''

உங்கள் திருமணம் மற்றும் கணவர் பற்றி?

 'என் கணவர் பெயர் வசந்த் குமார்.  நடன இயக்குநராக இருக்கிறார். எங்களுடையது காதல் திருமணம். என்னுடைய தோழி, அவருடைய நடன வகுப்பு மாணவி. ஒரு நாள் கல்லூரி விழாவிற்கு, அவர் பயிற்சி கொடுத்த நடன மாணவி வரமுடியாத சூழ்நிலை. எதேச்சையாக என்னைப் பார்த்தவர், 'அவருக்குப் பதில் நீ டான்ஸ் பண்றியா?' என கேட்டார். 'எனக்கு ஆடத்தெரியாது' என சொன்னேன். 'நான் கற்றுக் கொடுக்கிறேன்' என்று சொல்லி, பயிற்சி கொடுத்து ஆட வைத்தார். அதற்குப்பிறகு, என் தோழியிடம், 'டான்ஸ் ஆடும்போது கடைசியா ஒரு கத்திரிக்கா ஆடுச்சே அது பேரு என்ன' என என் தோழியிடம் என்னைப் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். அதற்குப் பிறகு இருவரும் நண்பர்களானோம். ஒருவருடம் கழித்து, 'எனக்கு வீட்ல பொண்ணு  பார்க்கிறாங்க... எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு..நீ என்ன சொல்ற?'என கேட்டார். எங்க வீட்ல கேட்டு  பிரச்னை, சண்டைகளெல்லாம் முடிந்து, அவர்களை சமாளித்து சம்மதிக்க வைத்துவிட்டோம். செல்ல மகள் பூஜா, இப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.
நீங்கள் அதிகம் விரும்பி வாங்கும் பொருள்?

எனக்கு பயணம் செய்வது அவ்வளவு பிடிக்கும். எந்த இடத்திற்குப் போனாலும், ஹேண்ட் பேக்  மற்றும் செருப்புகள் வாங்கிவிடுவேன். எவ்வளவு விலை என்றெல்லாம் பார்க்கமாட்டேன். அப்படி ஒரு கிரேஸ்
  
உங்களுக்குப் பிடித்த நடிகர்கள்?

ராஜ்குமார், ரஜினிகாந்த், மம்முட்டி, அமிதாப் என ஒவ்வொரு மொழி டாப் ஹீரோஸூம் பிடிக்கும். எல்லா மொழிகள்லயும் படம் பார்ப்பேன். மற்ற மொழிப்படங்களைவிட, தற்போது கன்னடத்தில் நல்ல படங்கள் வந்துகொண்டிருக்கிறது.

உங்கள் துறையில் பாதுகாப்பு எப்படி?

செக்யூரிட்டி என்பது நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதைப் பொறுத்தது. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இது இரண்டு பேருக்குமே பொருந்தும். அதற்காக சின்னத்திரை, வெள்ளித்திரையில் எல்லோரும் நல்லவர்கள் என கூறவில்லை. சில பேர் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் மற்றவர்கள் மீதும் தவறான கண்ணோட்டம் இருக்கிறது என்பது உண்மை. இரவு, பகல் பார்க்காமல் எல்லா நேரங்களிலும் வேலைப் பார்த்திருக்கிறேன்.  1996-ல் இருந்து இப்போது வரை இந்த துறையில் என்றைக்குமே ஆண்களைப் பார்த்துப் பயந்தது கிடையாது.

மற்றபடி, பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி பெண்கள் அதை சரியாகக் கையாள வேண்டும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற போக்கோ, விளையாட்டுத்தனமாகவோ எதையும் அணுகக் கூடாது. இப்போதுள்ள பெண்கள் பலபேர், வாழ்க்கையை விளையாட்டாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் பிரச்னையே. வாழ்க்கை என்பது மிகவும் கவனமாக எடுத்துச் செல்லவேண்டியது. அவ்வளவு எளிதானது கிடையாது என்பதை உணர வேண்டும்.


EmoticonEmoticon

Ads Inside Post