தோனி ஏன் ’தல’ தெரியுமா? - ஒரு ரசிக வெறியனின் டைரி


ஏப்ரல் 2005. எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு  வீட்டிற்கு சென்று, ஸ்கூலுக்கு திரும்புவது வழக்கம். அன்று இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் வேறு. வேகமாக வீட்டிற்கு ஓடினால் கரன்ட் இல்லை. சோகமாக சாப்பிட்டுவிட்டு வரும்போது எதிரில் வந்தார் ஆனந்த் அண்ணன். ஸ்கூல் சீனியர். 'ஸ்கோர் எவ்ளோண்ணே?' என்றேன். 'வெளுத்துட்டானுகடா... 356' என்றார். அந்தக்  காலகட்டத்தில் 300-ஐ தொட்டாலே புருவங்கள் உயரும். 'எப்படிண்ணே?' என்றேன். 'புதுசா ஒரு சடையன் வந்துருக்கான்ல..... காட்டான் மாதிரி அடிக்கிறான்' என ஊர் மணத்தோடு ஒரு  'வார்த்தையைச்' சேர்த்துப்  பெருமையாகச்  சொன்னார். தோனி எனக்கு அறிமுகமானது சடையனாகவும், காட்டானாகவும்தான்.
 அந்த மேட்ச்சை லைவ்வாக பார்க்க முடியாததில் அவ்வளவு வருத்தம். ஆனால் துயர் துடைக்க வந்தார் மீட்பர் தோனி. அதே ஆண்டின் அக்டோபர் மாதம். இலங்கை,  ஆடித் தள்ளுபடி போல 299 only/- என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. சேஸிங்கில் 300 ரன்கள் எல்லாம் நம்மூர் எம்.எல்.ஏக்கள் போல,  எப்போதாவதுதான் பார்வையில்படும். அதே மாதிரி ஒன் டவுனில் இறங்கி வெளுத்தார் தோனி. 183 நாட் அவுட். 10 சிக்ஸர்கள். அதுமாதிரியான அடியை அப்போதுவரை பார்த்ததில்லை. மறுநாள் ஸ்கூலில் 'டார்கெட் கம்மியா போச்சு . இல்லனா நம்ம பய 200 போட்டுருப்பான்' என்றார் ஆறுமுகம் சார். 300 எல்லாம் சாதாரணம் என அசால்ட் சேதுவானார் தோனி.

* 2007. பங்காளதேஷ், இந்திய அணியின் உலகக் கோப்பை கனவை கானல் நீராக்கி இருந்த நேரம். போதாக்குறைக்கு சேப்பலின் குடைச்சல் வேறு. எங்களின் ஆதர்சம் டிராவிட், கலங்கியபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் குழப்பத்திலும் சோகத்திலும் இருந்த நேரம். தம்மாத்துண்டு இளைஞர்களோடு உலகக் கோப்பைக்கு சென்றது இந்தியா. கேப்டன் தோனி! முதல் போட்டியின் Bowl out-ன் போது, தனக்கு கூலான பக்கம் இருப்பதை உலகிற்குக்  காட்டினார் தோனி. இறுதிப் போட்டி. மிஸ்பா பிரம்மாண்ட வில்லனாய் அவதரித்த நேரத்தில், ஜோகிந்தரை அழைத்து வந்தார். அப்போது திட்டியவர்களுள் நானும் ஒருவன். மிஸ்பா ஸ்கூப் அடிக்க, அதிசயமாய் ஶ்ரீசாந்த் சொதப்பாமல் பிடிக்க, மொத்த தேசமும் குதித்து எழுந்தது. அதுநாள் வரை நாங்கள் கண்டிருந்த அதிகபட்ச மகிழ்ச்சியே நாட்வெஸ்டில் கங்குலி சட்டையை கழற்றி சுற்றியபோதுதான். இப்போது உலகக் கோப்பை. அதுவு பரம வைரி பாகிஸ்தானோடு. தோனி சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் எங்கள் இதயங்களில்.
* ஐ.பி.எல் தொடங்கியது அடுத்த ஆண்டில். தோனிதான் அதிக விலைக்கு வாங்கப்பட்டார். அதுவும் சென்னை அணிக்கு. ஆவலாய் சென்னை மேட்ச்சை பார்க்கத் தொடங்கிய எங்களின் முதல் ரியாக்‌ஷன் 'ச்சை!'. காரணம், மஞ்சள் கலர் ஜெர்ஸி. மஞ்சள் நிறம் திருவிழா  கலர் என தமிழர் ரத்தங்களில் ஊறி ஊறுகாய் ஆயிருந்தது. 'அட சட்டையை விடு, சேட்டையை பாரு' என பிரித்து பொங்கல் வைத்தார் தோனி. அந்த சீசனில் ஜஸ்ட் மிஸ்ஸானாலும் 2010, 2011-ல் சென்னை அணி சாம்பியனானது. சாம்பியன்ஸ் லீக் வழியே வெளிநாடுகளின் சாமான்யர்களையும் சென்னை பெயரை  முணுமுணுக்க வைத்தார். தோனி 'தல' ஆனார். மஞ்சளும் பிடித்த கலர் ஆனது எங்களுக்கு.

* அதிக வரவேற்பு பெறாத டெஸ்ட் போட்டிகளும் கவனம் பந்த்  தொடங்கியது 2009-க்கு பின்னர்தான். காரணம் 'தல' தோனி. தொடர்ந்து 18 மாதங்கள் நம்பர் 1 இடத்தில் இந்தியாவைப்  பொத்தி பாதுகாத்தார். 'கங்காருவை குதிச்சு குதிச்சு வெளியே போகச்  சொல்லு. அந்த இடத்திற்கு புலி ஸ்டைலா நடந்து வருது பாரு!' - தோனி தன் கேப்டன்சி மூலம் உலகிற்கு விடுத்த ஸ்டைல் ஸ்டேட்மென்ட் இது.
 


* 2011 உலகக்கோப்பை. சொந்த மண்ணில் சூப்பர் வாய்ப்பு. செமஸ்டர் இறுதியில் நடந்தன போட்டிகள். ஹாஸ்டலில் போராடி அனுமதி வாங்கி, ஸ்க்ரீன் கட்டி போட்டிகளைப்  பார்த்தோம். காலிறுதியில் ஆஸ்திரேலியாவை அவுட்டாக்கி, செமியில் பாகிஸ்தானை பார்சல் கட்டிவிட்டு,  இலங்கையை ஃபைனலில் சந்தித்தது இந்தியா. ஸ்டடி லீவில் ஊரில் இருந்த நேரம். 275 என்பது டி20 யுகத்தில் சுமாரான டார்கெட் என்பதால், 'வா மாப்ள... நம்ம பேட்டிங் ஆரம்பிக்கிறதுக்குள்ள வெடி வாங்கிட்டு வந்துடுவோம்' என்றான் வைரமுத்து. (பள்ளியின் ஆஸ்தான பேட்ஸ்மேன் அவன்தான்).
'நல்ல நேரத்துக்கு வெடி வாங்க வந்தீங்கடா, சேவாக் டக் அவுட்' என காதில் அணுகுண்டை பற்ற வைத்தார் கடைக்கார அண்ணன். 'நீ வாங்குடா, நாம ஜெயிச்சுருவோம்' என்றான் நண்பன். இறுதிக்கட்டம். மொத்த ஸ்டேடியமும் தோனி, தோனி, என புல்லரிக்க பாடிக் கொண்டிருந்தது. நாங்களும்தான். வெற்றிக்கு 4 ரன்கள் தேவை. குலசேகரா வீசிய பந்து பிட்ச்சான நொடியில் கத்தினான் வைரமுத்து. '........ சிக்ஸுடா!' (பேட்ஸ்மேன்ஸ் இன்ஸ்டிங்ட்). வெற்றிக் களிப்பையும்தாண்டி அவன் உற்சாகத்தில் உதிர்த்த அந்த 'வார்த்தைக்காக' அப்பாவைத்  திரும்பிப் பார்த்தேன். அதே வார்த்தையை அவர் மனதிற்குள் சொல்லிக் கொண்டாடுகிறார் என்பது அவர் கண்களில் தெரிந்தது. 28 ஆண்டுகால ஏக்கம். ஊரெல்லாம் வெடி போட்டுக் கொளுத்தினோம் அன்று. வழியில் மடக்கிய போலீஸ்காரர் ஒருவர், எங்களிடம் வெடி வாங்கி, 'இது தோனிக்கு' என பற்ற வைத்தார். 
* 2013. சாம்பியன்ஸ் டிராபி. சொந்த ஊர் பலத்தில் இறுதிப்போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்திற்கு நாம் வைத்த டார்கெட் 130. டி20 யுகத்தில் இது கொசு மாதிரி. ஆனால் பாவம் இங்கிலாந்திற்கு அது ஸிகா பரப்பும் வைரஸானது. 2007-ல் ஜோகிந்தர் போல இப்போது இஷாந்த். எவ்வளவு குறைந்த ஸ்கோரையும் தற்காத்து வெல்லலாம் என தோனி காட்டியது வருங்கால கேப்டன்களுக்கான பாலபாடம்.

* அதன்பின் நிறைய நடந்தது. ஃபார்ம் அவுட். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு. குத்திக் கிழிக்கும் விமர்சனங்கள். ஆனால் அனைத்தையும் தாண்டி பங்காளதேஷுடனான போட்டியின் இறுதிப் பந்தில் ஆட்டத்தை வென்று, 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என லவுட் ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டார். ஆயிரம் குறைகள் இருந்தாலும் தோனியின் காலம் இந்திய கிரிக்கெட்டின் வேற லெவல் காலம். 35 வயதாயிற்று. சீக்கிரமே ஓய்வும் பெறக்கூடும். ஆனாலும் கவலை இல்லை.

எந்த நிலையிலும் தோனி யானை மாதிரி!

- நித்திஷ்


EmoticonEmoticon

Ads Inside Post