இந்தியா, வங்கதேசத்துக்கு பயங்கர பூகம்ப அபாயம்: ஆய்வு எச்சரிக்கை




கிழக்கு இந்திய நகரப்பகுதிகளை ஒன்றுமில்லாமல் செய்யும் ராட்சத பூகம்பம் ஒன்று வங்கதேச பூமிக்கு அடியில் உறங்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நதிப்படுகையின் கீழ் உள்ள 2 கண்டத் தட்டுக்களில் (டெக்டானிக் பிளேட்) அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டத்தட்டு எல்லையில் பிளவு ஏற்பட்டால் சுமார் 14கோடி பேர் பாதிக்கப்படுவர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது பூமி ஆடுவதால் ஏற்படும் பேரிழப்பு மட்டுமல்ல நதிகளின் போக்கிலேயே மாற்றமேற்படலாம் என்றும் கடல்மட்டத்துக்கு நெருக்கமாக உள்ள நிலப்பகுதியிலும் கடுமையான மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் பூமியின் மேலோட்டின் ஒரு பகுதி அல்லது டெக்டானிக் பிளேட் மெதுவாக மற்றொரு பிளேட்டின் அடியில் செல்லும் பகுதியாக, அதாவது சப்டக்‌ஷன் மண்டலமாக இந்த புதிய பூகம்பப் பகுதி அறியப்பட்டுள்ளது.

இத்தகைய சப்டக்‌ஷன் மண்டலத்தில்தான் உலகின் மிகப்பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் உலகின் ஆகப்பெரிய பூகம்பமாகக் கருதப்படும் சிலி பூகம்பம், சுமார் 2,30,000 உயிர்களை பலிவாங்கிய 2004 சுமத்ரா பூகம்பம் மற்றும் சுனாமி, 2011-ல் பகுஷிமாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் ஆகியவை இத்தகையதே.

ஆனால் வித்தியாசம் என்னவெனில் இத்தகைய சப்டக்‌ஷன் மண்டலம் இதுவரை கடலுக்கு அடியில்தான் இருந்தது, ஆனால் தற்போது இந்தியா, வங்கதேசத்துக்கு கீழ் உள்ள சப்டக்‌ஷன் மண்டலம் முழுதும் நிலப்பகுதியில் உள்ளது என்பதே இதன் அச்சுறுத்தலை இரட்டிப்பாக்கியுள்ளது.

இந்த கண்டத்தட்டுகளுக்கு இடையே சுமார் 400 ஆண்டுகளாக அழுத்தம் சேர்ந்துள்ளது, இவ்விடத்தில் பெரிய பூகம்பம் ஏற்பட்டதாக வரலாற்றுபூர்வ சான்றுகள் இல்லை. ஆனால் இதுதான் இப்பகுதியில் அழுத்தம் பலமடங்கு அபாயகரமாக சேர்ந்து அடைவு கொண்டிருக்கலாம் என்று ஆய்வின் முன்னிலை அறிவியலாளர் மைக்கேல் ஸ்டெக்லர் தெரிவிக்கிறார்.

அழுத்தம் ரிலீஸ் ஆகும் போது, அதாவது பூகம்பம் ஏற்படும் போது ரிக்டர் அளவுகோலில் 8.2 அல்லது 9-ஐயும் கடக்கும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம்.

இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியாவின் பெரும்பகுதிகளைக் கொண்டுள்ள ராட்சத கண்டத் தட்டு, வடக்கு நோக்கி முட்டி மோதி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பெருமோதல்தான் இமயமலை வளர்வதற்கு காரணமாக இருந்தது, இதனால் 2015-ல் நேபாளத்தில் 9000 உயிர்களையும் ஏகப்பட்ட கட்டிடங்களையும் விழுங்கிய பூகம்பம் ஏற்பட்டது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

வங்கதேசமும், கிழக்கு இந்தியாவும் மிதமான நிலநடுக்கங்களுக்கே தாங்காத பூமிப்பகுதியின் மேல் உட்கார்ந்திருக்கிறது. அதாவது பிரம்மபுத்திரா, கங்கை நதிப் படுகையின் மீது அமர்ந்துள்ளது.

இப்பகுதியில் பூமிக்கு அடியிஅல் 12 மைல்களுக்கு வெறும் சேறும் சகதியும் உள்ள பகுதியாகும். இதனடியில்தான் சப்டக்‌ஷன் மண்டலம் உள்ளது. 

எனவே இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் சாலைகள், நதிகள், கட்டிடங்களை பூமி விழுங்கி விடும் அபாயம் உள்ளது என்று டாக்க பல்கலைக் கழக ஆய்வாளர் சையத் ஹுமாயுன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு சரியானதாக இருந்தால், அழுத்தம் கூடி வரும் பிளேட் பகுதியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது அப்படி ஏற்பட்டால் கிழக்கு இந்தியா நிச்சயம் கடுமையான, எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்கும், இதன் விளைவுகள் மியான்மர் வரை பரவும் என்று நியூ மெக்சிகோ ஸ்டேட் பல்கலைக் கழக நிலநடுக்க ஆய்வாளர் ஜேம்ஸ் நி என்பவர் எச்சரிக்கிறார்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரம் நேச்சர் ஜியோ சயன்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது


EmoticonEmoticon

Ads Inside Post