'இலவச வைஃபை, மானிய ஸ்கூட்டர், சாலையோர மோட்டல்!' -கோட்டையைக் கலக்கும் புதிய திட்டங்கள்



மிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அதிரடியாக சில அறிவிப்புகளை முதல்வர் வெளியிடலாம் என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். ' இலவச வைஃபை, ஸ்கூட்டி ஆகியவற்றோடு சாலையோரத்தில் சிறிய மோட்டல்களை திறப்பது பற்றியும் தீவிர ஆலோசனை நடக்கிறது' என்கின்றனர் அதிகாரிகள்.
சட்டமன்றத் தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் பொறுப்பில் அமர்ந்த அன்றே மதுவிலக்கு உள்பட ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற கையெழுத்திட்டார். தற்போது ஆலயங்கள், பள்ளிக் கூடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆயிரம் டாஸ்மாக் கடைகளை அகற்றுவது தொடர்பாக, வட்டாட்சியர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பட்டினப்பாக்கத்தில் ஆசிரியை நந்தினி மரணத்தை அடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு தரக் கூடிய கடைகளை நீக்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வருகிற 21-ம் தேதி சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் வெளியிடப்பட இருக்கிறது. அதில், ' புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன' என்கின்றனர் அதிகாரிகள்.

" அக்டோபரில் நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க தலைமை தயாராகி வருகிறது. அதற்கேற்ப, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுகளையும் தாண்டி சிலவற்றைச் செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடும் முடிவை முன்பே எடுத்துவிட்டார். அதற்கேற்ப, அமைச்சரவைக் கூட்டத்தில், ' அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தக் கூடிய லீக்கேஜ்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள். ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி சேர்க்க பாடுபடுங்கள்' என கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார். அதற்கேற்ப, துறையின் செயலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய முதல்வரின் சிறப்பு செயலர் சாந்த ஷீலா நாயர், ' அவரவர் துறையில் அக்கறையோடு வேலை பாருங்கள். மாதம்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்' என அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார் நம்மிடம் பேசிய தலைமைச் செயலக அதிகாரி ஒருவர். மேலும் அவர் கூறுகையில், 

தொடர்ந்து, " ஏற்கெனவே, 500 டாஸ்மாக் கடைகளை மூடியதால் அரசுக்கு ஆண்டுக்கு 260 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக ஆயிரம் கடைகளை மூடினால் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும். மேலும், ஐந்தாயிரம் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதில் சிக்கல் ஏற்படும். அதற்கேற்ப வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, போக்குவரத்துத் துறையில் இருந்து முதல்வரின் கவனத்திற்குக் கடிதம் ஒன்று சென்றுள்ளது.
அதில், ' நீண்டதூரப் பயணங்களுக்கு அரசுப் பேருந்துகளையே பொதுமக்கள் நம்பியுள்ளனர். பகல், இரவுப் பயணங்களில் சரியான உணவில்லாமல், தரமற்ற உணவுக் கடைகளில் பேருந்துகளை நிறுத்துகின்றனர். சாலையோர மோட்டல்களால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அம்மா உணவகம் போல, அரசே தரமான மோட்டல்களை திறந்தால் மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும்' எனத் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு முதல்வர் ஒப்புதல் கொடுக்க இருக்கிறார். அதேபோல், இளைய தலைமுறையினரைக் கவர பொது இடங்களில் இலவச வைஃபை வழங்கும் திட்டமும், 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டி வழங்குவது குறித்த அறிவிப்பும் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் வெளியாகலாம்" என்றார்.

இலவச வைஃபை, மானிய விலை ஸ்கூட்டர், அம்மா மோட்டல், ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடல் என உள்ளாட்சி தேர்தலைக் கவனத்தில் கொண்டு டாப்-கியரில் பறந்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க தலைமை.

ஆ.விஜயானந்த் 


EmoticonEmoticon

Ads Inside Post